காவிரியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: ஒகேனக்கல்லுக்கு 36 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

By KU BUREAU

தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 36 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 29 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் 36 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.

நீர்வரத்து உயர்வு காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரதான அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை வெள்ளத்தால் மூழ்கிவிட்டது. ஆற்றில் பரிசல் இயக்கவும், ஆறு, அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

மேட்டூர் நீர்மட்டம் 51 அடி: மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 23,989 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 31,102 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலை அணை நீர்மட்டம் 51.38 அடியாகவும், நீர்இருப்பு 18.69 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.

நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் (பொ) தயாளகுமார் மேட்டூர் அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது கரை, இடது கரை, 16 கண்மதகு உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். செயற் பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர், அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து, அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

தலைமைப் பொறியாளர் (பொ) தயாளகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகா, கேரளா பகுதிகளில் அதிதீவிரமாக மழை பெய்து வருவதால், கபினி, கேஆர்எஸ் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில், நீர்வரத்தைப் பொறுத்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE