மதரீதியிலான இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால் அதிகளவில் மத மாற்றங்கள் நிகழும்: தமிழக பாஜக கருத்து

By KU BUREAU

சென்னை: பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: 14.3 சதவீதம் உள்ள இஸ்லாமியர்களுக்கு 15 சதவீதம் பங்கு கிடையாதா? உரிமை கிடையாதா? என்று கேட்கிறார் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார்.

இட ஒதுக்கீடு என்பது இந்தியாவில் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளினால் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மக்களை மேம்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு.

யார் ஒருவர் இஸ்லாமியர் இல்லையோ, கிறிஸ்துவர் இல்லையோ, பார்ஸி இல்லையோ அவர் 'இந்து' என்கிறது சட்டம். அதன்படி மத ரீதியாக தங்களை அடையாளம் கொள்வோருக்கு இட ஒதுக்கீடு என்பது பொருந்தாது.

மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஏற்க மறுத்து, அவை சட்ட விரோதமானது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால், மத மாற்றங்கள் அதிக அளவில் நிகழ வாய்ப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மதங்களுக்கிடையே கடும் வேற்றுமைகளும், பதற்றங்களும் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE