இலங்கை கடற்படையினர் விவகாரம்: தமிழக மீனவர்களின் பாதுகாப்பு முக்கியமானது - உயர் நீதிமன்றம்

By KU BUREAU

மதுரை: தமிழக மீனவர்களும் இந்தியக் குடிமக்கள்தான். அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப் பண்ணையைச் சேர்ந்த தீரன் முருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் பிரச்சினை அதிகரித்து வருகிறது.

ஜூன் 2-ம் வாரத்தில் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களும், ஜூன் 23-ல் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களும், கடந்த 1-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்வதால் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வாதாரத்துக்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் குற்றவாளிகள் போல கைது செய்வதுடன், அவர்கள் மீது கிருமிநாசினியை தெளித்து மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் குரூர மனப்பான்மையுடன் இலங்கை கடற்படையினர் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை: குஜராத் மீனவர்கள் 2021-ல் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்டபோது, மத்திய அரசு பாகிஸ்தான் கடற்படையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், தமிழக மீனவர்கள் விஷயத்தில் அதுபோன்ற நடவடிக்கை எதையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் 26 மீனவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு, தமிழக மீனவர்களும், இந்தியக் குடிமக்களே. அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்றனர். மத்திய அரசுத் தரப்பில், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவித்து தமிழகம் கொண்டு வரவும், பிரச்சினையை சரிசெய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரம் மற்றொரு நாட்டுடன் தொடர்புடையது. எனவே, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விரைவாக விடுவித்து, தமிழகம் கொண்டுவரத் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என நம்புகிறோம். வழக்கு முடிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE