`துணை முதல்வர் பதவி; பாஜகவில் எஸ்.பி.வேலுமணி’: பொய்ச் செய்தி வெளியிட்டதாக யூடியூப் சேனல் மீது அதிமுக புகார்

By ரஜினி

துணை முதல்வர் பதவி உண்டு என்று சொல்லி, பாஜகவில் சேருகிறார் எஸ்.பி.வேலுமணி என்று பொய்யான செய்தியை வெளியிட்ட யூடியூப் சேனல் மற்றும் அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அதிமுக ஐடி விங்க் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி பாஜகவில் இணையப்போவதாக பொய்யான செய்தியை வெளியிட்ட ’தினசேவல்’ என்ற யூடியூப் சேனல் உரிமையாளர் கண்ணன் கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிங்கை ராமசந்திரன், கடந்த 19-ம் தேதி ’தினசேவல்’ வலைதளத்தில், ’துணை முதல்வர் பதவி, பாஜகவில் இணையும் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடிக்கு குட்பை’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டதாகவும், அதில் அதிமுக மூழ்கும் கப்பல் என்பதால் எஸ்.பி.வேலுமணி அடுத்த மாதம் ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் உண்மைக்கு புறம்பான தகவலை பதிவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டம் எஸ்.பி.வேலுமணியின் கோட்டை என்பதால், கோவை மாவட்டத்திற்குள் நுழைவதற்காக திமுக திட்டமிட்டு எஸ்.பி.வேலுமணியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இந்தச் செய்தியை பரப்பியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

இதுபோன்ற அவதூறு செய்தியை பரப்பிய ’தினசேவல்’ என்ற வலைதளத்தை முடக்கி, அதன் உரிமையாளர் கண்ணன் கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், யார் தூண்டுதலின் பேரில் இந்தச் செய்தி பரப்பப்பட்டது என்பது குறித்தும் காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE