ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் பின்புலம் முதல் நீலகிரி மழை பாதிப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 

By KU BUREAU

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சிக்கும் அரசியல் கட்சியினர்! -பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூரில் அவரது வீட்டின் முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 11 பேரை அடுத்தடுத்து கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிய திருவேங்கடம் கடந்த 14 ம் தேதி போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கொலையாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடி வரை கைமாறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக புதன்கிழமை சதீஷ், மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கொலை வழக்கில் சிக்கியவர்களில் திமுக நிர்வாகி மகன், அதிமுக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக போலீஸார் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மலர்க்கொடியும், தமாகாவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன் ஆகியோர் அந்தந்த கட்சிகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜுலாஹி ரயில் நிலையத்துக்கு சில கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பு உள்ள பிகவுரா என்ற இடத்தில் இந்த ரயிலின் ஏசி கோச்சின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்து குறித்து அறிந்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்பாக வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாக ரயிலின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

நீட் வழக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு: இளநிலை நீட் தேர்வு தனது புனிதத்தை முற்றாக இழந்தால் மட்டுமே மறு தேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகள் வியாழக்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முழு தேர்வுமே தனது புனிதத்தை இழந்துவிட்டது என்றால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்” என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும், நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாகவும், தேர்வு மையங்கள் வாரியாகவும் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலைக்குள் இணையதளத்தில் இதனை வெளியிட வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கை விடுத்ததை ஏற்று சனிக்கிழமை பிற்பகல் வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. அதேநேரம், மாணவர் விவரங்களை வெளியிடக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஃபாஸ்டாக் - புதிய உத்தரவு: தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும்போது முகப்பு கண்ணாடியின் உள்பக்கத்தில் ஃபாஸ்டேக் வில்லை ஒட்டாத வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும்போது அந்த வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ரீல்ஸ் விபரீதம்: பள்ளத்தில் விழுந்து இன்ஸ்டா பிரபலம் உயிரிழப்பு: மும்பையைச் சேர்ந்தவர் 27 வயதான ஆன்வி கம்தார். இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பயணம் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்த இன்ஃப்ளூயன்சரான இவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், மகாராஷ்டிராவின் ரய்காட் மாவட்டத்தில் உள்ள பிரபலமான கும்பே அருவிக்கு அருகே பாறையின் உச்சியில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆன்வி கம்தார் உயிரிழந்தார்.

நிதி ஆயோக் அறிக்கை: அண்ணாமலை கருத்து: “நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், பிற மாநிலங்களை விட தமிழகம் பல துறைகளில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறை, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மிகவும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளாகவும் குறைபாடுகளாகவும் தமிழக பாஜக இதுவரை தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டிய பல விஷயங்களை நிதி ஆயோக் அறிக்கை பிரதிபலித்துள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பெங்களூரு ஜிடி மாலை ஒரு வாரம் மூட உத்தரவு: வேஷ்டி அணிந்துவந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த குற்றச்சாட்டில் சிக்கிய பெங்களூரு ஜிடி மாலை ஒரு வாரம் மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்கு செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்திய அணி அறிவிப்பு: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஷுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. தொடரிலிருந்து பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் விருப்பப் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இருப்பதாக தெரிகிறது.

நீலகிரியில் தொடரும் கனமழையால் பாதிப்பு: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள‌ அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தும், குடியிருப்புகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவலாஞ்சி, தொட்டபெட்டா போன்ற சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு, பயணிகளுக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், மழையின் தீவிரம் காரணமாக தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE