மதுரை ‘டைடல் பார்க்’ பணிகளை 2026-ல் முடிக்கத் திட்டம்: மேலும் 5 ஏக்கர் நிலம் கூடுதலாக ஒதுக்கீடு!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மாட்டுத்தாவணியில் அமைய உள்ள டைடல் பார்க் திட்டத்தை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 5 ஏக்கர் நிலம் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திட்ட மதிப்பீடும் உயர்த்தப்பட்டு, பிரம்மாண்டமாக டைடல் பார்க் கட்டிடம் அமையவிருக்கிறது.

இந்தியாவில் பெங்களூரு, சென்னை, ஐதராபாத், புனே போன்ற நகரங்களில்தான் மென்பொருள் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. ஐடி ஊழியர்களுக்கு லட்சங்களில் ஊதியம் தரக்கூடிய பெரும் மென்பொருள் நிறுவனங்களும் இந்த நகரங்களில் தான் உள்ளன. அதனால், ஐடி ஊழியர்களின் பார்வையும், மென்பொருள் நிறுவனங்களின் முதலீடுகளும் இந்த நகரங்களை மையமாக கொண்டே உள்ளன.

தமிழகத்தில் சென்னையைத் தாண்டி, மென்பொருள் நிறுவனங்களின் முதலீடுகளையும், அதன் வேலைவாய்ப்புகளையும், மற்ற நகரங்களுக்கும் பரவலாக்க, தகவல் தொழில்நுட்ப துறை மூலம், தமிழக அரசு புதிய டைடல் பார்க் திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறது. அந்த வகையில், பட்ஜெட்டில் தமிழக அரசு திருச்சி, மதுரையில் டைடல் பார்க் திட்டத்தை அறிவித்தது. மதுரையில் டைடல் பார்க் திட்டம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமையும் என அறிவித்தது.

முதற்கட்டமாக 5 ஏக்கரில் மட்டுமே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டு, அந்த நிலத்தை ஒப்படைப்பதற்கான கோப்புகளே மாநகராட்சி சார்பில் தயார் செய்யப்பட்டன. தற்போது திடீரென கூடுதலாக அதே இடத்தில் உள்ள மேலும் 5 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க தமிழக அரசு, மதுரை மாநகராட்சியை கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், டைடல் பார்க் அதிகாரிகள், தற்போது மேலும் 5 ஏக்கர் நிலத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

மாநகராட்சி டைடல் பார்க் திட்டத்திற்கான 10 ஏக்கர் நிலத்தையும் ஒப்படைத்த பிறகு, டெண்டர் விட்டு டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தொடங்கிவிடும். இதுகுறித்து டைடல் பார்க் திட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஆரம்பத்தில் 5.6 ஏக்கரில் டைடல் பார்க் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது கூடுதலாக 5.5 ஏக்கர் நிலம் மாநகராட்சியிடம் கோரப்பட்டுள்ளது.

முதலில் 5.6 ஏக்கரில் ரூ.600 கோடியில் மொத்தம் 12 மாடிகளைக் கொண்ட டைடல் பார்க் கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. தற்போது கூடுதலாக மேலும் 5.5 ஏக்கர் வழங்கப்படுவதால் கட்டிட வடிவமைப்பு மாற்றம் பெறும். திட்டமதிப்பீடும் உயர்கிறது. இதன் கட்டுமானப் பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாட்டுத்தாவணியில் உள்ள மாநகராட்சி நிலத்தில் கூடுதலாக 5 ஏக்கர் நிலத்தை அளந்து ஒப்படைக்கும் பணி நடக்கிறது’’ என்றார்.

சென்னையில் உள்ள டைடல் பார்க் போல், மதுரையிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சிறந்த கட்டமைப்பை வழங்கும் இந்த டைடல் பார்க், மதுரையில் ஐடி துறையின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்க சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மதுரையில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், நகரின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE