விழுப்புரம்: தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகம் சார்பில், உலக சாதனைக்கான மல்லர் கம்பம் போட்டிகள் விழுப்புரத்தில் ஜூலை 21-ம் தேதி நடைபெறவுள்ளது.
18 மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் பங்கேற்கும் மல்லர் கம்பம் போட்டியை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கிவைக்கிறார். இது குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகத்தின் மாநிலச் செயலாளர் துரை.செந்தில்குமார், “தமிழ்நாடு மல்லர் கம்பம் விளையாட்டின் மகாகுரு உலகதுரையின் 85-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் முதன்முதலாக உலக சாதனைக்கான மல்லர் கம்பம் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட18 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் 100 மல்லர் கம்பங்களை நிறுவி, குழுவாகவும், தனியாகவும் சாகசங்களை செய்ய உள்ளனர்.
» ‘மெட்ராஸ்' மாகாணம் 'தமிழ்நாடு' ஆனது எப்போது? - தமிழ்நாடு தினம் சிறப்பு பகிர்வு
» பெற்றோருடன் சண்டை: நீண்ட வருடம் கழித்து இணைந்த சின்னத்திரை நடிகை ஆல்யா!
உலக சாதனைக்காக நடத்தப்படும் இந்த நிகழ்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணை மேலாளர் சுஜாதா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க இணைச் செயலர் பாலாஜி மற்றும் விளையாட்டுத் துறை அலுவலர்கள், வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடலில் மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். இதில் பொதுமக்களும் மாணவர்களும் திரளாக பங்கேற்க வேண்டும்” என்றார்.
அப்போது அவருடன் தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகத் தலைவர் ஜனார்தனன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், கழகத்தின் விழுப்புரம் மாவட்டப் பொருளாளர் செந்தமிழ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.