பள்ளிக்கரணை காவல் நிலையம் இரண்டாகப் பிரிப்பு: புதிதாக மேடவாக்கம் காவல் நிலையம் உதயம்

By பெ.ஜேம்ஸ் குமார்

கோவிலம்பாக்கம்: மேடவாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலையத்தை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

தாம்பரம் மாநகர காவல் எல்லை தொடங்கப்பட்ட போது 20 காவல் நிலையங்கள் இருந்தன. அதன் பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், கிளாம்பாக்கம் காவல் நிலையம் புதிதாக திறக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக பள்ளிக்கரணை காவல் நிலையத்தை பிரித்து மேடவாக்கம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு, கோவிலம்பாக்கத்தில் மேடவாக்கம் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இன்று இந்தக் காவல் நிலையத்தை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, பள்ளிக்கரணை காவல் மாவட்ட துணை ஆணையர் கெளதம் கோயல், சேலையூர் உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெய்சில் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். இதையும் சேர்த்து தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களின் எண்ணிக்கை 22 ஆக உயந்துள்ளது.

புதியதாக தொடங்கப்பட்ட காவல் நிலையத்தில் மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகள் அடங்கும். சுண்ணாம்பு கொளத்தூர் கிராமத்தில் உள்ள 3,4,5 ஆகிய மூன்று வார்டுகள் மட்டும் பள்ளிக்கரணை காவல் எல்லைக்குள் தொடரும். மேடவாக்கம் காவல் நிலைய எல்லைக்குள் மொத்தம் 1,20,000 மக்கள் வசிக்கின்றனர். தற்சமயம் இந்தக் காவல் நிலையத்திற்கு முகமது பரக்கத்துல்லா என்ற ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் 2 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர், 73 போலீஸார் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுண்ணாம்பு கொளத்தூர் கிராமத்தில் உள்ள மூன்று வார்டுகளையும் மேடவாக்கம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன், ஆணையர் அபின் தினேஷ் மோடக்கிடம் கோரிக்கை மனு அளித்தார். அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE