ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தெப்பம் அருகே மீன் சந்தை - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான சர்க்கரை குளம் தெப்பம் எதிரே கட்டப்பட்டுள்ள தினசரி காய்கறி சந்தையில் மீன் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி தலைவரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான சர்க்கரை குளம் தெப்பத்தை சுற்றிலும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம், தாய்- சேய் நல விடுதி, தொடக்கப்பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பேருந்து நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக சர்க்கரை குளம் தெப்பம் எதிரே இடம் தேர்வு செய்யப்பட்டு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.14 கோடி மதிப்பில் 24 கடைகளுடன் தினசரி சந்தை கட்டப்பட்டது. இந்த புதிய சந்தையை கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்த நிலையில் தினசரி காய்கறி சந்தைக்கு கட்டப்பட்ட கடைகளில் மீன் சந்தை அமைக்க, நகராட்சியில் நாளை டெண்டர் விடப்பட உள்ளது.

இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், நகராட்சி தலைவர் ரவி கண்ணனிடம் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில், ‘நகராட்சி 20-வது வார்டில் சர்க்கரை குளம் தெப்பம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் மீன் சந்தை வருவதாக தகவல் வந்தது. குடியிருப்பு பகுதியின் மத்தியில் மீன் சந்தை வந்தால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும்.

இதன் அருகே ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம், பள்ளி மற்றும் கோயில்கள் உள்ளதாலும், விழாக் காலங்களில் இவ்வழியே ஆண்டாள் ரெங்கமன்னார், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் வீதி உலா வரும் என்பதாலும், மீன் சந்தையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE