பேருந்து வருகை நேரத்தை பயணிகள் அறிய 532 நிறுத்தங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை அமைக்க முடிவு

By KU BUREAU

சென்னை: சென்னையில் மாநகர பேருந்து வருகை நேரங்களை பயணிகள் அறியமாநகராட்சி சார்பில் 532 இடங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட உள்ளன. அதற்காக 8 இடங்களில் சோதனை அடிப்படையில் நிறுவி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் 387 கி.மீ. நீளமுடைய 471 பேருந்து தட சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் வழியாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 31 பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 3, 233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 30 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் பயன்பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகரில் நாம் ஏற விரும்பும் பேருந்து எத்தனை மணிக்குஅந்த பேருந்து நிறுத்தத்துக்கு வரும் என்று தெரியாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிஉள்ளது.

பயணிகள் வசதிக்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து போக்குவரத்து நுண்ணறிவு திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட பேருந்து நிலையம் அல்லது நிறுத்தத்துக்கு குறிப்பிட்ட பேருந்து எத்தனை மணிக்கு, எத்தனை நிமிடங்களில் வரும் என்பதை அறிவிக்கும் டிஜிட்டல் பலகை நிறுவ திட்டமிட்டுள்ளது.

அதற்காக மாநகரில் உள்ள 532 பேருந்து நிறுத்தங்கள், 71பேருந்து முனையங்களை தேர்வுசெய்துள்ளது. இவற்றில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப 2 வரிகள், 4 வரிகள், 10 வரிகளில் தகவல் தரும் டிஜிட்டல் பலகைகள் நிறுவப்பட உள்ளன. சோதனை அடிப்படையில் எழும்பூர், பல்லவன் சாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட 8 இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் நிறுவியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தற்போது சோதனை அடிப்படையில் 50 மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ்கருவிகளை பொருத்தி, பேருந்துகள்இயக்க தகவல், சாலை போக்குவரத்துநெரிசல் போன்ற விவரங்களைசேகரித்து, குறிப்பிட்ட பேருந்து, குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்துக்கு வரவாய்ப்புள்ள நேரத்தை கணித்து, தகவல் பலகையில் வெளியிடப்படுகிறது.

அடுத்த மாதம் தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பிறகு, அனைத்து பேருந்து நிறுத்தங்கள், முனையங்களில் பேருந்து வருகை குறித்த டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE