தொடர் மழையால் காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி!

By இல.ராஜகோபால்

கோவை: தொடர் மழையால் காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுற்று வட்டார பகுதிகளில் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளதால் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய கோவை, உக்கடம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி காய்கறி சில்லறை விற்பனை மார்க்கெட் வியாபாரிகள், “தொடர் மழை காரணமாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. நாட்டுத் தக்காளி கிலோ ரூ. 90, ஆப்பிள் தக்காளி கிலோ ரூ. 100, பெரிய வெங்காயம் கிலோ ரூ. 50, சின்ன வெங்காயம் கிலோ ரூ. 40, பீன்ஸ் ரூ. 80 என்ற விலைகளில் விற்பனையாகிறது.

அவரை ரூ. 75, பாகற்காய் ரூ. 60, பச்சை மிளகாய் ரூ. 85, முருங்கக்காய் ரூ. 100, சுண்டைக்காய் ரூ. 140, ஊட்டி உருளைக்கிழங்கு ரூ. 90, கேரட் ரூ. 85, பீட்ரூட் ரூ. 75, குடமிளகாய் ரூ. 75 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக விலை குறைவாக காணப்படும் முட்டைக் கோஸ் விலையும் ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது. பூண்டு ஒரு கிலோ ரூ. 254-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பழங்களில் மாதுளை கிலோ ரூ. 200, திராட்சை ரூ. 80, மாம்பழம் ரூ. 150, ஆப்பிள் ரூ. 220, ஆரஞ்சு ரூ. 100, சாத்துக்குடி ரூ. 60, அன்னாசிப்பழம் ரூ.45 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும் வரும் நாட்களில் காய்கறி மற்றும் பழங்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE