சென்னையில் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் இன்று அதிகாலை திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து பேருந்துகள் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் அதிகாலை 4.45 மணியளவில் இயங்குவது வழக்கம். ஆனால் இன்று அதிகாலை அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும், 2022-ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு வழங்க தடையாக இருக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், மின்சாரப் பேருந்து, மினி பேருந்துகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர் நியமன டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டமானது சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதன் காரணமாக பெரும்பாலான பணிமனைகளில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இதன் பின்னர் அதிகாரிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க துவங்கியது.
» நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: அவலாஞ்சியில் 34 செ.மீ. அதிகனமழை பதிவு