திருப்பூர் மாநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

By KU BUREAU

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சுற்றுப் பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. முட்டிக்களான்பதி கிராமத்தில் குட்டை தடுப்பணை உடைந்ததால், ஊருக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதில், பெருமாநல்லூர் அருகே மேற்குபதி ஊராட்சி முட்டிக்களான்பதி கிராமத்தில நீராதாரக் குட்டை நிரம்பியதால், தடுப்பணை உடைந்து மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. மேலும் மின்கம்பம் சாய்ந்ததால் மின் விநியோகம் தடைபட்டது. மேற்குபதி அருகே கிருஷ்ணாபுரத்தில் இருந்து முட்டிக்களான்பதி செல்லும் பிரதான சாலையில் மழை நீர், வெள்ளம்போல ஓடியது. கிருஷ்ணாபுரம் தரைப்பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியது.

இந்த பாலத்தை உயர்த்திக்கட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். சேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையால், பல்வேறு குட்டைகள் நிரம்பின. புலிப்பார் ஊராட்சி பொன்னேகவுண்டன்புதூர் தொட்டியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவர் வளர்த்து வந்த 3 மாடுகள் மின்னல் பாய்ந்து உயிரிழந்தன.

இதேபோல திருப்பூர் மாநகரை சுற்றியுள்ள பெருமாநல்லூர் சாலை, காங்கயம் சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை, புதிய பேருந்து நிலையம், கோவில் வழி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம்போல மழைநீர் ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மாநகரில் ஜெயலட்சுமி நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்கு பெய்த கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. திருப்பூர் வடக்கு பட்டம்பாளையத்தில் ஓடை உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE