நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: அவலாஞ்சியில் 34 செ.மீ. அதிகனமழை பதிவு

By KU BUREAU

சென்னை: கேரளா மற்றும் கர்நாடகா மாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பருவமழை தீவிரமடைந்து அடைமழை பெய்து வருகிறது. அம்மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளான நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் தமிழக எல்லையில் 20 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அடுத்த 6 நாட்களுக்கான மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நாளை (ஜூலை 19) ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஜூலை 18), தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 34 செமீ, மேல் பவானியில் 22 செமீ, தேவாலாவில் 15 செமீ, பந்தலூரில் 14 செமீ, எமரால்டு, விண்ட் வொர்த் எஸ்டேட்டில் தலா 13 செமீ, குந்தா பாலம், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 11 செமீ, வூட் பிரையர் எஸ்டேட், பார்வூட், கூடலூர் சந்தை, செருமுள்ளியில் தலா 10 செமீ, மேல் கூடலூரில் 9 செமீ, கோவை மாவட்டம் வால்பாறையில் 8 செமீ, சின்கோனா, சிறுவாணி அடிவாரம், நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE