கனமழையால் தண்டவாளத்தில் மண் சரிவு: ஊட்டி மலை ரயில் சேவை 3-வது நாளாக ரத்து

By KU BUREAU

குன்னூர் / கோவை: நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் 3-வது நாளாக இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் அடர்லி - ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்தன. சில இடங்களில் தண்டவாளம் மண் மூடிக்காணப்பட்டது. இதனால், கடந்த 18-ம் தேதி ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

தண்டவாளத்தை மூடிக் கிடந்த மண்ணை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (மே 20) 3-வது நாளாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வண்டி எண் 06136 மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில், வண்டி எண் 06137 உதகை - மேட்டுப்பாளையம் ரயில், வண்டி எண் 06172 மேட்டுப்பாளையம் - உதகை சிறப்பு ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு பணமும் திரும்ப செலுத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் அருகே நேற்று சாலையில் மரம் விழுந்தது. இதனால், உதகை, கர்நாடகா, கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பல மணி நேரத்துக்குப் பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கேத்தியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவானது. கிளன்மார்கன் - 32, நடுவட்டம் - 26, மசினகுடி - 23, உதகை - 21.4, கூடலூர் - 18, அப்பர் பவானி - 14, உலிக்கல் - 14, தேவாலா - 8, பாடந்தொரை - 8, ஓவேலி - 6, கல்லட்டி - 6, சேரங்கோடு - 5, குந்தா - 4, செருமுள்ளி - 4, எமரால்டு - 4, கோத்தகிரி - 3, பர்லியாறு - 2, கீழ் கோத்தகிரி - 2, கெத்தை - 2, அவலாஞ்சி - 2, பந்தலூர் - 1 மில்லி மீட்டர் மழை பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE