திமுகவின் கொள்கைகளை மாணவர்கள் மீது திணிக்க கூடாது: முன்னாள் நீதிபதி சந்துருவுக்கு அண்ணாமலை கண்டனம்

By KU BUREAU

சென்னை: குழு அறிக்கை என்ற பெயரில் திமுகவின் கொள்கைகளை மாணவர்கள் மீது திணிக்க கூடாது என முன்னாள் நீதிபதி சந்துருவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழக அரசு சார்பில் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் கடந்த 2023 ஆகஸ்ட் 12-ம்தேதி ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலினிடம் இந்தகுழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதில் உள்ள பரிந்துரைகள் குறித்த விவரங்கள், ஊடகங்களுக்கு வழங்கப்பட்டன.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகள், பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவை மாணவ சமுதாயத்தினரிடம் வேற்றுமையை விதைப்பவை. இதனால், இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த சில குறிப்பிட்ட அம்சங்களுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன.

அறிக்கையில் உள்ள ஏற்க முடியாத பரிந்துரைகள் குறித்து தமிழக பாஜக சார்பிலும் பேசியிருந்தோம். பாஜக செயற்குழு கூட்டத்தில், நீதிபதி சந்துரு அறிக்கைக்குஎதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஒரு நபர் குழு, இதர குழு என பல குழுக்களில் அங்கம் வகிக்கும் முன்னாள் நீதிபதி சந்துருவால், அவர் அளித்துள்ள அறிக்கைக்கு வந்திருக்கும் எதிர்ப்பைஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது. ஜனநாயகத்தில் மக்கள் சார்ந்த அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பது பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளின் பணி.

தவிர, திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம். அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், முன்னாள் நீதிபதி சந்துரு அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம். அதை விடுத்து, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப் பணத்தில், திமுகவின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும்நிச்சயம் இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE