தமிழர்களுக்கு 80% இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைகளில் தமிழர்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநில தொழிற்சாலைகள், ஆலைகள் மற்றும் பிற அமைப்புகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதற்கான சட்ட முன்வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டால் பிற மாநிலத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் கூட கர்நாடக மக்களின் வேலை உரிமையை பாதுகாக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.

கர்நாடகத்தில் மட்டுமின்றி குஜராத், மகாராஷ்டிராவில் 80 சதவீத பணிகளும் ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தானில் 75 சதவீத பணிகளும் மத்திய பிரதேசத்தில் 70 சதவீத பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெலங்கானாவிலும் இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது.

இதேபோல இத்தகைய சட்டம் நிறைவேற்றப்பட்டால் கர்நாடகத்திலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும். இதனால், அங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் தமிழர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வேலைவாய்ப்புகள் பறிபோகும்.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது 75 சதவீதவேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இனியும் தயங்காமல் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 சதவீதத்தை தமிழக இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும். வரும் அக்டோபர் மாத சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே இந்த இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE