மின்கட்டண உயர்வுக்கு எதிராக 25-ல் ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் தகவல்

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 25-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மாநிலக் குழு கூட்டம்சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் நிலைமைகளை விவாதித்து சில முக்கியமான முடிவுகளை இக்கூட்டத்தில் எடுக்கஉள்ளோம். செப்டம்பர் மாதம் கிளை மாநாடுகள் தொடங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளன.

தமிழகத்தில் பாஜக நடவடிக்கைகளை முறியடிக்கவும், சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சி அமைத்துள்ள மோடி அரசு மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறிப்பதைக் கண்டித்தும், மாநில சுயாட்சி, சமூகநீதி கோரிக்கைகளை வலியுறுத்தியும் இயக்கம் நடத்த திட்டமிட உள்ளோம்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில், மக்கள் மீதான சுமையை மேலும் பல மடங்கு அதிகரித்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் வரிச் சலுகை அளிக்க உள்ளதாக தெரிகிறது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் தப்பித்து விடாமல், தண்டனை பெற்று தரும் வகையில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் மீது மிகுந்த சந்தேகத்துக்குரிய வகையில் என்கவுன்ட்டர் நடந்துள்ளது. என்கவுன்ட்டர்களை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. வன்மையாகக் கண்டிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது. மாநில காவல்துறை விசாரணையே போதுமானது.

மாநில அரசு உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி 25-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். காவிரி விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அரசின் முடிவை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது மாநிலக்குழு உறுப்பினர்கள் வே.ராஜசேகரன், ரா.சிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE