விஜய்யின் அரசியல் நகர்வுகள் முதல் கன்னடர் வேலை மசோதா சலசலப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

முதலில் தவெக மாநாடு, அடுத்து நடைபயணம்! - இந்த ஆண்டு இறுதியில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு நடத்தப்பட இருப்பதாகவும், திருச்சி அல்லது மதுரையில் மாநாட்டை நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கட்சியின் கொள்கைகள், சின்னம், கொடியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தினர் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை தற்போது கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமித் ஷாவுடன் ஆக்கபூர்வமான சந்திப்பு: ஆளுநர்: டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து தமிழகம் தொடர்பாக விவாதித்தார். அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து ஆளுநர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன், தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழல்கள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வமான சந்திப்பை மேற்கொண்டேன். நம் மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும், அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலமோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் சுமார் ஐந்தரை மணி நேரத்துக்கும் மேலாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்து தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு பணியிட மாற்றப்பட்டு மருத்துவ விடுப்பில் இருந்த நிலையில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜை, ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும், அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்கவும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மீது அண்ணாமலை தாக்கு: “அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நீதிபதி சந்துரு அதிகாரபூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம். அதைவிடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில், திமுகவின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும்,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.

மின் கட்டண உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு: கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாடும் ‘உடனுக்குடன்’ கொள்ளையடிக்கும் மாடலை வெளிப்படுத்தி வருவதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், “கர்நாடகாவைத் தொடர்ந்து தற்பேது தமிழ்நாடும் ‘உடனுக்குடன்’ கொள்ளையடிக்கும் மாடலை வெளிப்படுத்தி உள்ளது. இண்டியா கூட்டணி எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம், தேர்தலுக்கு முன் இனிக்கும் வாக்குறுதிகளை அளித்தன. ஆட்சிக்கு வந்த பிறகு சாமானிய மக்கள் மீது வரிகளை விதித்து, விலைவாசியை உயர்த்தி, அவர்களின் முதுகெலும்பை உடைத்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திடக் கோரியும் தமிழகம் முழுவதும் ஜூலை 25-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கன்னடர்களுக்கான வேலை இடஒதுக்கீடு மசோதா சலசலப்பு: கர்நாடகாவில் கன்னட மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை பணியில் அமர்த்தும்போது, நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களை மட்டுமே நியமிப்பதை உறுதிப்படுத்துவதற்கான மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கிய தொழில் துறை தலைவர்களில் ஒருவரான கிரண் மஜும்தார் ஷா, “மிகவும் திறமையானவர்களை நிறுவனத்தில் சேர்ப்பதற்கு ஏற்ப, இந்தக் கொள்கையில் சில விதிவிலக்குகள் அளிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.மற்றொரு தொழில் துறை தலைவரான மோகன்தாஸ் பாய், இந்த மசோதா "பாரபட்சமானது, பிற்போக்குத்தனமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது" என்று விமர்சித்துள்ளார்.

இவ்வாறு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக ஆழமான ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீல் உறுதி அளித்துள்ளார். மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பாக, சட்ட அமைச்சர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தொழிலாளர் அமைச்சர், மற்றும் பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சரான தான் ஆகியோர் கூட்டாக முதல்வரைச் சந்தித்து இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்தப் பின்னணியில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கடுமையான எதிர்ப்புகளின் எதிரொலியாக, இந்த மசோதாவை நிறைவேற்றும் முடிவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில்தான் உள்ளது. விரிவாக ஆலோசிக்கப்பட்ட பிறகு, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு பாமக வலியுறுத்தல்: “தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற சட்டம் இயற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை; தடையும் இல்லை. எனவே, இனியும் தயங்காமல் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 விழுக்காட்டை தமிழக இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் இளைஞர் உதவித் தொகை திட்டம் அறிவிப்பு: வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் மகாராஷ்டிர இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின்படி, 12-வது முடிந்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரமும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

தஞ்சை விபத்தில் பலியான 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: தஞ்சை வளம்பக்குடி அருகே சரக்கு லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ட்ரம்ப்பை கொலை செய்ய ஈரான் சதி? - அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியிருந்தது குறித்து சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் கிடைத்ததாக சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE