அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 7,200 புதிய பேருந்துகள் வாங்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

By டி.ஜி.ரகுபதி

கோவை: அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 7,200 புதிய பேருந்துகளை வாங்கவிருப்பதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 21 புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு, கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் சாலை, சாயிபாபா காலனியில் உள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று புதிய பேருந்துகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில், தற்போது புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, ஆயிரம் புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 11-ம் தேதி தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் 11 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி திருவள்ளூரில் 10 புதிய பேருந்துகளையும் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு உட்பட்ட கோவை மண்டலத்துக்கு 21 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 7,200 புதிய பேருந்துகள் தமிழ்நாடு அரசால் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன. அதில் இந்த வாரத்துக்குள் 300 பேருந்துகள் கொண்டுவரப்பட உள்ளன.

புதிய பேருந்துகள் வரவர மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மாநகரங்களில் தாழ்தள பேருந்துகளை இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அடுத்த வாரத்தில் சென்னையில் தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதிமுக ஆட்சியில் அதிக பேருந்துகள் வாங்காததால் தற்போது புதிய பேருந்துகளை வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

பயன்படுத்தக்கூடிய, அடித்தளம் சிறப்பாக உள்ள 800 பழைய பேருந்துகளின் மேலே கூடு கட்டப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு திட்டமிட்டு, முதல்கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் முடிந்து முதல் 100 பேருந்துகள் சென்னையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அடுத்தகட்டமாக முக்கிய நகரங்களுக்கு வழங்கப்படும்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அதிக விபத்துகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெறும். இந்த வாரமே விசாரணை தொடங்கப்படும். வரும் 22-ம் தேதி மினி பேருந்துகள் இயக்கம் தொடர்பாக உள்துறை செயலாளர் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு, பிறகு கருத்துரு உருவாக்கப்பட்டு, மினி பேருந்துகள் எந்த வழித்தடத்தில் இயங்கும் என முதல்வர் தெரிவிப்பார். மின் கட்டணத்தைப் போல பேருந்து கட்டணமும் உயரும் என எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE