மாற்றுத்திறனாளியின் கைகளால் பேருந்து நிறுத்த நிழற்குடையை திறக்கவைத்த எம்எல்ஏ: கும்பகோணத்தில் நெகிழ்ச்சி

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடையை மாற்றுத்திறனாளியின் கைகளால் திறக்கவைத்த கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனின் செயல் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

கும்பகோணம் மாநகராட்சி, கரூப்பூர், கல்லூரிச் சாலை ஹவுசிங் யூனிட் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் ஏராளமானவர்கள் பேருந்தில் சென்று வருகிறார்கள். இவர்கள், பேருந்திற்காக காத்திருக்கும் போது, அங்கு உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், நிழற்குடை அமைத்துத் தரவேண்டும் என அண்மையில் கும்பகோணம் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4.75 லட்சம் மதிப்பில் அப்பகுதியில் புதிதாக பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கும்பகோணம் எம்எல்ஏ-வான சாக்கோட்டை க.அன்பழகன் இந்த நிழற்குடையை திறந்து வைக்க வந்திருந்தார்.

அப்போது அதேப் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ஆர்வமுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதை அறிந்த எம்எல்ஏ அன்பழகன், அவரை அழைத்து அவரது கைகளால் பேருந்து நிழற்குடையை திறக்கவைத்தார். இதைப் பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிக்கு மரியாதை வழங்கிய எம்எல்ஏ-வுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், கும்பகோணம் துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் ஆர்.லட்சுமணன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் தி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE