தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் பறிமுதல்; ரூ.5,000 அபராதம் - மதுரையில் எச்சரிக்கை

By கி.மகாராஜன்

மதுரை: மதுரையில் மாடு முட்டி முதியவர் உயிரிழந்த நிலையில், மாடுகளை வீடுகளில் பராமரிக்காமல் தெருக்களில் சுற்றித்திரிய விட்டால், கால்நடைகளை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மதுரை ஒத்தக்கடை ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பல்வேறு இடங்களில் சாலை, தெருக்களில் மாடுகள் சுற்றித்திரிவது அதிகரித்து வருகிறது. மாடுகள் வளர்ப்போர் மாடுகளை வீடு, தொழுவம், தோட்டங்களில் வளர்க்காமல் பால் கறக்கும் நேரம் தவிர்த்து பிற நேரங்களில் சாலை, தெருக்களில் விட்டுவிடுகின்றனர். இந்த மாடுகள் சாலை, தெருக்களில் கும்பலாக சுற்றித் திரிவதால் வாகனங்களில் செல்ல முடியவில்லை. நடந்து செல்வோரையும் முட்டி காயப்படுத்துகின்றன. சாலையோரம், தெருக்களில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களையும் மாடுகள் இடித்து சேதப்படுத்துகின்றன.

மேலும், இந்த மாடுகள் இரவு நேரங்களில் சாலைகளின் நடுவில் படுத்துவிடுகின்றன. மாடுகள் படுத்திருப்பது தெரியாமல் வாகனங்களில் வருவோர் மாடுகளின் மீது முட்டி விபத்தில் சிக்கி காயமடைவதும் அதிகரித்து வருகிறது. மதுரை ஒத்தக்கடை, திருமோகூர், நரசிங்கம், கருப்பாயூரணி, புதுதாமரைப்பட்டி, காளிகாப்பான், அம்மாபட்டி பகுதிகளில் சாலை, தெருக்களில் அதிகளவில் மாடுகள் திரிகின்றன.

ஒத்தக்கடை ஊராட்சி அலுவலகம் முன்பு மேலூர் பிரதான சாலையில் சில நாட்களுக்கு முன்பு பேத்தியை பார்க்க புதுக்கோட்டையிலிருந்து பேருந்தில் வந்திறங்கிய முதியவரை மாடு நெஞ்சில் கொம்பால் குத்தியது. இதில் அந்த முதியவர் உயிரிழந்தார். இதுவரை மாடுகள் முட்டி காயங்கள் நிகழ்ந்த நிலையில் ஒத்தக்கடையில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மாடு வளர்ப்போர்களுக்கு ஒத்தக்கடை ஊராட்சி மற்றும் போலீஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒத்தக்கடை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் "சாலைகள், தெருக்களில் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்தும், போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. இதனால் மாடுகளை உரிமையாளர்கள் பாதுகாப்பான முறையில் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும். தவறினால் மாடுகளை பறிமுதல் செய்வதுடன், உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE