100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை விவசாயத்துக்குப் பயன்படுத்த முடிவு: புதுச்சேரி சபாநாயகர் தகவல்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களை விவசாயத்துக்கு பயன்படுத்தும் முடிவை நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்கவுள்ளதாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.

புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கத்தின் சார்பாக தேசிய நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கரியமாணிக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். அத்துடன் இயற்கை விவசாயம் செய்த விவசாயிகளை பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண்துறை இயக்குநர் மற்றும் நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்க நிர்வாகிகள் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பேரவைத் தலைவர் செல்வம், "விவசாயிகளின் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாறிக்கொண்டு இருக்கும் காரணத்தால் மக்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் குறைந்து வருகிறது. விவசாய உற்பத்திக்கான செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனபோதும் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் மக்களுக்கு விவசாயத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது.” என்றார்.

மேலும், “நூறு நாள் வேலையில் ஈடுபடுவோரை விவசாய வேலைக்குப் பயன்படுத்தினால் உற்பத்தி செலவை குறைக்க முடியும். இது குறித்தான அறிவிப்பை வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்கவுள்ளார். அந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும். இத்தகைய நெல் திருவிழாக்கள் மூலமும், சங்கத்தினர் மூலமும் இயற்கை விவசாயத்தை பாதுகாக்க முடியும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE