மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

By KU BUREAU

சென்னை: உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்சார கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஒன்றிய அரசின் மின் அமைச்சக வழிகாட்டுதலின்படி, விநியோக முறையை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் நிதியை பெற ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்த வேண்டும் எனும் முன் நிபந்தனையின் அடிப்படையில் இது நடந்திருப்பதாக விளக்கம் அளித்திருக்கிறது.

அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அனைத்து வகை மின் பயனிட்டாளர் கட்டணம் குறைவாக உள்ளது. இருப்பினும் தற்போதைய மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த விலை உயர்வின் காரணமாக நடுத்தர வர்க்கம் மற்றும் சிறு, குறு நிறுவனங்களும், வியாபாரிகளும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மின் நுகர்வோர் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்த விலையேற்றத்தை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE