கன மழை: குந்தா அணை திறப்பு - வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் வெளியேற்றம்!

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, அணையின் பாதுகாப்புக் கருதி வினாடிக்கு 300 கன அடி வீதம் அணையிலிருந்து 2 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மாவட்ட முழுவதும் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. குந்தா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கட்லாடா, ஒசஹட்டி, தங்காடு தோட்டம், பிக்குலி நீரோடைகளில் வழக்கத்தை விட தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, குந்தா அணையின் முழு கொள்ளளவான 89 அடிக்கும் தண்ணீர் நிரம்பியது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று காலை 7 மணி முதல் 2 மதகுகள் வழியாக வினாடிக்கு 300 கன அடி வீதம் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 34 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம் அவலாஞ்சியில் 36 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பர் பவானியில் 21.7 சென்டிமீட்டர் மழையும், தேவாலாவில் 15.2 சென்டிமீட்டர் மழையும், பந்தலூரில் 13.6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதையடுத்து உதகை, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் மீட்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE