சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்த டெல்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் அவரை கடந்த ஜூன் 26 அன்று கைது செய்தது. அதன்படி சிறை மாற்று வாரண்ட் மூலமாக திஹார் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கை15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று நடந்தது. ஜாபர் சாதிக்கும் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணை அதிகாரியான சுனில் சங்கர் யாதவும் ஆஜரானார்.
» முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் விக்கிரவாண்டி புதிய எம்எல்ஏ பதவியேற்பு
» மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதிட்டதாவது: ஜாபர் சாதிக் மீது போதை பொருள்கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கெனவே சென்னை மற்றும் மும்பையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் பெரும் மூளையாக இவர் செயல்பட்டுள்ளார்.
இதன்மூலமாக கிடைத்த பெரும்தொகை மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதற்கு தேவையான சாட்சியங்கள், ஆவணங்கள் அமலாக்கத் துறை வசம் உள்ளது. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் சிறை மாற்று பிடிவாரண்ட் மூலமாக இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளோம். இவரை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம். இவ்வாறு வழக்கறிஞர் வாதிட்டார்.
பதிலுக்கு ஜாபர் சாதிக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், சென்னை மற்றும் மும்பையில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு ஜாபர் சாதிக் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத் துறை கூறுவதை ஏற்க முடியாது.கைது செய்த 15 நாட்களுக்குள் கோரினால் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க முடியும் என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
அப்போது ஜாபர் சாதிக்கிடம் நீங்கள் அமலாக்கத் துறையின் காவலில் செல்ல விரும்புகிறீர்களா என நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு தனக்கு விருப்பம் இல்லை என்றும் ஏற்கெனவே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டதாகவும் ஜாபர் சாதிக் பதிலளித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதி, வரும் ஜூலை 18 அன்று அவர் தனது உறவினரை சந்திக்க அனுமதியளித்தும் மறுநாள் ஜூலை 19 மாலை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அமலாக்கத் துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
நண்பர் வீட்டில் திடீர் சோதனை: சென்னை - ஆவடியில் உள்ள ஜாபர் சாதிக்கின் நண்பர் ஜோசப் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருவேற்காட்டில் ஜோசப் வசித்த வாடகை வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஜோசப், அவரது மனைவி ஆயிஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்கில் இருந்து ஜோசப் வங்கிக் கணக்குகளுக்கு அதிக அளவில் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை மற்றும் விசாரணை நடைபெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது