முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் விக்கிரவாண்டி புதிய எம்எல்ஏ பதவியேற்பு

By KU BUREAU

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நல குறைவால் காலமானார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினராக அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். சட்டப்பேரவை தலைவர் அறையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அன்னியூர் சிவாவுக்கு பேரவை தலைவர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், விசிக தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்களிடம் அன்னியூர் சிவா எம்எல்ஏ கூறியபோது, ‘‘விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை தொடர்ந்து செய்வேன். எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காதவர்களுக்கும் உண்டான அடிப்படை வசதிகளை செய்து தருவேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE