சென்னை: தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.83 சதவீத அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் 3-வது முறையாக மின்கட்டண உயர்வை மக்களுக்கு பரிசளித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விலைவாசி உயர்வாலும், ரேஷன் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவைகளை வழங்காமலும் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கிய இந்த அரசு, மின்கட்டண உயர்வு என்ற பேரிடியைதமிழக மக்களின் தலையில் இறக்கியிருப்பது கண்டனத்துக்குரியது. மின் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அனைத்து வரிகளையும் உயர்த்திய திமுக அரசு, மீண்டும் மின் கட்டண உயர்வை அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். இதனால் ஏழை, எளிய மக்கள் கூடுதல் சுமையை சுமக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு என அனைத்தையும் பல மடங்கு உயர்த்திய நிலையில், மீண்டும் ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு திமுக அரசு அதிர்ச்சி அளித்திருக்கிறது. மின் உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மின்சாரம் வாங்கிய செலவை, பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ளது. எனவே மின் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
» குருப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி
» உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்: குடியரசு தலைவர் உத்தரவு
பாமக நிறுவனர் ராமதாஸ்: விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு கட்டண உயர்வை அறிவிப்பது, மக்களை அரசு எந்த அளவுக்கு ஏமாற்றுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. மின் கட்டண உயர்வால் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலையை திமுக அரசு உருவாக்கியிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: மத்திய அரசு அறிமுகம் செய்த மின்சார திருத்தச் சட்ட மசோதா பரிசீலனையில் இருக்கும் நிலையில், அதன் நோக்கத்தை நிறைவேற்ற மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. மானிய சலுகைகள் கொண்ட மின்கட்டணம் நிர்ணயிக்கும் மாநில அரசின் உரிமை பறிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. எனவே மின் கட்டண உயர்வை ஒழுங்குமுறை ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழகத்தில் மீண்டும் 4.83 சதவீதம் கூடுதல் மின் கட்டணம் மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ள இந்தஅறிவிப்பை உடனடியாக தமிழகஅரசு திரும்பப் பெறுவதுடன், மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம்சிறு, குறு வியாபாரிகள், விசைத்தறி நெசவாளர்கள், விவசாயிகள்என அனைத்துதரப்பு மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மின் கட்டணம் உயர்வால் பெருமளவு பாதிக்கப்படுவது சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர்தான். எனவே மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
மேலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் வலியுறுத்தியுள்ளனர்.