கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் உட்பட தனிப்பிரிவு போலீஸார் 7 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவசேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயம் அருந்தி, இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேருக்கு முழுமையாக கண்பார்வை பறிபோயுள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பிகள் உட்பட 9 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதே போல் மாவட்ட ஆட்சியரையும் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த வாரம் 5 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 73 போலீஸார் கூண்டோடு இடமாற்றம் செய்து புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று கள்ளச்சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தனி பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் உட்பட தனிப்பிரிவு போலீசார் 7 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு போலீஸார் மீது இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
» இருசக்கர வாகனம் மோதியதில் நீலகிரி நீதிபதி உயிரிழப்பு
» மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடினாலும் ஆதரிக்க தயங்குகிறார்கள்: ராமதாஸ் ஆதங்கம்