தூத்துக்குடி: பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. நேற்று முதல் இதமான சூழல் நிலவி வருகிறது. தூத்துக்குடி பகுதியில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதேபோன்று பலத்த காற்றும் வீசியது. இதனால் சாலைகளில் புழுதி பறந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தெற்கு சத்தீஷ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நிலவுகிறது. அதே போன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 19-ம் தேதி சமயத்தில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் பலத்த காற்று வீசியது.
» உச்ச நீதிமன்றத்துக்கு இரண்டு புதிய நீதிபதிகள்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தேர்வு!
» 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 266 விசைப்படகுகளும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் மீன்பிடி துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே போன்று மாவட்டத்தில் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இருப்பினும் நாளை (ஜூலை 17) மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்குச் செல்வார்கள் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.