நீட் தேர்வு பாடக்குறிப்புகளை தமிழில் வழங்க நடவடிக்கை: மாணவர்களிடம் புதுவை ஆட்சியர் உறுதி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: நீட் தேர்வு தொடர்பான பாடங்களை எளிதில் புரிந்து கொண்டு படிப்பதற்கு ஏதுவாக பாடக் குறிப்புகளை தமிழில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, நடவடிக்கை எடுப்பதாக புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி, தவளக்குப்பம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முதலில், ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்து வகுப்பு எடுக்கிறார்களா என்பதை ஆய்வு செய்தார்.

குறித்த நேரத்தில் பள்ளிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி முதல்வருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பள்ளியில் உள்ள ஆய்வுக் கூடங்களைப் பார்வையிட்டு, அங்கு அனைத்து உபகரணங்களும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார். பின்னர், வகுப்பறைகளுக்குச் சென்று மாணவ - மாணவியருடன் உரையாடிய ஆட்சியர், மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம் என்றார்.

மேலும், நீட் தேர்வுக்கு நன்றாகப் படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று மாணவர்களிடம் ஆட்சியர் கேட்டுக் கொண்டார். அப்போது, நீட் தேர்வு தொடர்பான பாடங்களை எளிதில் புரிந்து கொண்டு படிப்பதற்கு ஏதுவாக பாடக் குறிப்புகளை தமிழில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், நீட் தொடர்பான பாடக் குறிப்புகளைத் தமிழில் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE