வாழ்வாதாரமில்லாத மாற்றுத்திறனாளிகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம்: திண்டுக்கல்லில் பரபரப்பு

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள், ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வருகை தந்திருந்தனர். உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டைக் கடந்தும் உதவித் தொகை கிடைக்காததால் வாழ்வாதாரம் இழந்து நிற்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையொட்டி வாழ்வாதாரம் இல்லாத மாற்றுத்திறனாளிகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகள், ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பகத்சிங், மாநிலக்குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இதனை தொடர்ந்து, கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஆட்சியர் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE