சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அமையும் ஹாக்கி மைதானம்: அமைச்சர் உதயநிதி ஆய்வு!

By ம.மகாராஜன்

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஹாக்கி மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

தமிழக விளையாட்டுத்துறை சார்ந்த கட்டமைப்புகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு ‘முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம்’ அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.3 கோடியில் ஹாக்கி மைதானம், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றுடன் கூடிய ‘முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம்’ அமைக்கப்பட்டு வருகிறது.

சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது அரங்கில் இடம்பெறவுள்ள வசதிகள் தொடர்பான மாதிரி வரைபடங்களையும் அவர் பார்வையிட்டார். பின்னர் கட்டுமானப் பணிகளை நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடியில் அமைக்கப்பட்டு வரும் குத்துச்சண்டை மைதானத்தையும் நேரில் சென்று உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். சுமார் 1,000 பார்வையாளர்களுக்கான இருக்கை வசதியுடன் அமைக்கப்பட்டு வரும் இந்த மைதானத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், இனி வரும் காலங்களில் குத்துச்சண்டை போட்டிகளில் சாதிக்கத் துடிக்கும் வீரர்களுக்கு இது நிரந்தர பயிற்சிக்களமாக திகழும் என்றும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE