ஈரோடு: கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்துள்ளது.
பவானிசாகர் அணையில் 105 அடி வரை 32.8 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அணைக்கான நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்து வருகிறது.
இன்று காலை 8 மணிக்கு அணைக்கான நீர்வரத்து 10 ஆயிரத்து 399 கன அடியாக இருந்த நிலையில், 12 மணிக்கு இது 18 ஆயிரத்து 937 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி, காலிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று மதியம் 71.58 அடியாகவும், நீர் இருப்பு 11.62 டிஎம்சியாகவும் அதிகரித்தது. அணைக்கு விநாடிக்கு 18 ஆயிரத்து 937 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து கொடிவேரி பாசனத்திற்கு 500 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 450 கன அடியும், குடிநீர் தேவைக்காக 105 கன அடியும் என மொத்தம் 1,055 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
» குறைத் தீர்க்கும் உதவி எண்: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல்!
» வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது: 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு