அணுகுச்சாலை அமைக்க வலியுறுத்தி மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் மறியல்!

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் அணுகுச் சாலை அமைக்க வலியுறுத்தி கட்டுமானப் பணிக்குச் சென்ற வாகனங்களை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் (என்.ஹெச் - 744) திருமங்கலம் முதல் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் இடையிலான 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதில் கிருஷ்ணன்கோவில் - ஸ்ரீவில்லிபுத்தூர் இடையே 80 சதவீதத்திற்கும் மேல் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நான்கு வழிச்சாலையில் அணுகுச் சாலை ஏற்படுத்தாததால் விளைநிலங்களுக்குச் செல்ல முடியவில்லை எனக்கூறி, நான்கு வழிச்சாலையின் குறுக்கே டிராக்டரை நிறுத்தி, கட்டுமானப் பணிக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனை உடைத்து, தற்காலிகமாக வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தியதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலைக்கு கிழக்கே அச்சங்குளம், கடம்பங்குளம், கரைவளஞ்சான்பட்டி ஆகிய ஊர்களும், மேற்கே 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களும் உள்ளது. கிராம மக்கள் விளை நிலங்களுக்குச் செல்ல வண்டிப்பாதை பயன்பாட்டில் இருந்து வந்தது.

ஆனால் கிருஷ்ணன்கோவில் - ஸ்ரீவில்லிபுத்தூர் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட போது, வண்டிப்பாதை இருந்த இடத்தில் அணுகுச் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி விளைநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. நான்கு வழிச்சாலையை கடந்து விளை நிலங்களுக்குச் செல்ல வழி ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE