தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 14-ம் தேதி காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக இருந்தது. இது 15-ம் தேதி காலை 6 மணியளவில் 4,500 கன அடியாக குறைந்தது. ஆனால், அன்று மாலை 4 மணி அளவில் நீர்வரத்து திடீரென வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மேலும் அன்று இரவு ஏழு மணி அளவில் விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இந்நிலையில், இன்று காலை விநாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவிரி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக மாநில அணைகளுக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் முழுவதும் தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளுக்கு வரும் நீர் வரத்தின் அளவைப் பொறுத்து தமிழகத்தை நோக்கி வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. 2 தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநில அணைகளில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாகவும், இன்று காலை வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
» குறைத் தீர்க்கும் உதவி எண்: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல்!
» வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது: 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
நீர்வரத்து உயர்வை, ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலுவில் அமைந்துள்ள மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோர பகுதிகளை வருவாய்த் துறை, வனத் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நீர் வரத்து உயர்வு காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி தடைவிதித்துள்ளார்.
அதேபோல, தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அவசியம் இல்லாமல் ஆற்றைக் கடக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.