தபால் துறையில் 44,228 காலிப் பணியிடங்கள் - 10 வகுப்புதான் கல்வித் தகுதி!

By KU BUREAU

சென்னை: தபால் துறையில் 44,228 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதை அடுத்து தபால் துறை அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்திய தபால் துறையின் கீழ் தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப தபால் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி மொத்தம் 44,228 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தபால் துறை அழைப்பு விடுத்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தபால் அலுவலர் பணிக்கு 12 ஆயிரம் ரூபாய் முதல் 29,380 ரூபாய் வரையும், உதவி தபால் அலுவலர் பணிக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 24,470 ரூபாய் வரையும் சம்பளம் வழங்கப்படும். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால், இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது.

தபால் துறையின் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைன் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். பணியிடங்கள் தொடர்பான பிற தகவல்களை அறிய, தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதள பக்கத்தினை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 3,789 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE