ஹிஜாப் அணிந்த பெண்ணை இந்தியாவின் பிரதமராக பார்க்க விரும்புகிறேன்: அசாதுதீன் ஓவைசி

By காமதேனு

ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை இந்தியாவின் பிரதமராகப் பார்க்க விரும்புவதாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா பிஜப்பூரில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலுக்காக பிரச்சாரம் செய்த பின்னர் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "ஹலால் இறைச்சி, முஸ்லீம்களின் தொப்பிகள் மற்றும் தாடி ஆகியவற்றால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக பாஜகவினர் நினைக்கிறார்கள். முஸ்லீம்களின் உணவுப் பழக்கங்களில் அவர்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. பாஜக உண்மையில் முஸ்லீம் அடையாளத்திற்கு எதிரானது. சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்ற பிரதமரின் வார்த்தைகள் வெற்று சொல்லாடல்கள். இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் முஸ்லீம் அடையாளத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே பாஜகவின் உண்மையான செயல்திட்டம்" என்று ஓவைசி கூறினார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு முதல் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகள் நிலவி வருகின்றனர். இந்த நிலையில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை இந்தியாவின் பிரதமராகப் பார்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வக்ஃப் சொத்துகளில் மட்டும் ஏன் உ.பி. அரசு சோதனை நடத்துகிறீர்கள்? இந்து அறநிலைய வாரிய சொத்துக்களுக்கும் அதைச் செய்யுங்கள். மதரஸாக்களின் கணக்கெடுப்பில் சதி இருப்பதாக நான் கூறினேன், அது வரப்போகிறது. உ.பி அரசு 300வது பிரிவை (சொத்துக்கான உரிமை) மீறுகிறது.

யாராவது அரசு சொத்தை சட்ட விரோதமாக வக்ஃப் சொத்தாக பதிவு செய்திருந்தால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடுங்கள், தீர்ப்பாயம் செல்லுங்கள். உ.பி. அரசு வக்ஃப் சொத்துக்களை குறிவைத்து அதை அபகரிக்க முயற்சிக்கிறது. இது போன்ற இலக்கு கணக்கெடுப்பு முற்றிலும் தவறானது. நாங்கள் அதைக் கண்டிக்கிறோம்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE