‘ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரி' - அண்ணாமலையை வறுத்தெடுக்கும் செந்தில் பாலாஜி

By காமதேனு

தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது. கோவையில் சம்பவம் நடந்தவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன.

அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். ‘நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க’ என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது” என தெரிவித்துள்ளார்

தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் வசூல் குறித்த செய்திகள் இன்று வெளியாகின. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்திருந்தார்.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலைப் பற்றிப் பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தைச் சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும் ” எனகேள்வியெழுப்பியிருந்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE