சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட காலகட்டத்தில் நடந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞரும், அதிமுக உறுப்பினருமான பி.ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்.22 அன்று இரவு 10.25-க்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிச.5 இரவு 11.30-க்கு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சிகிச்சையின்போது ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும் அவர் இட்லி, பொங்கல் போன்ற உணவுகளை உட்கொண்டதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட அறையின் கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டதாகவும், உடல்நிலை குறித்து நிர்பந்தம் காரணமாகவே அறிக்கை வெளியிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. அவர்களுக்கு நிர்பந்தம் கொடுத்தது யார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
» தூத்துக்குடியில் 13 பேர் இறப்புக்கு காரணமான அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் அவர் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தியதாக அறிவிப்பு வெளியானது. இது சாத்தியமற்றது. இடைத்தேர்தல் படிவங்களில் மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகையை வாங்க முடிவு செய்தது யார் என்பது குறித்தும் விளக்கவில்லை.
அவர் இறந்துவிட்டதாக இரவு 11.30 மணிக்கு அறிவித்த நிலையில் அன்று இரவு 7 மணிக்கே எதற்காக புது முதல்வரை தேர்வு செய்ய கூட்டம் கூட்டப்பட்டது. தீபக் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீபாவுக்கு அனுமதி மறுத்தது ஏன் என்பது போன்ற பல்வேறு முடிச்சுகளுக்கு கடந்த 7 ஆண்டுகளாக எந்த பதிலும் இல்லை. எனவே இதுதொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் அமர்வில்நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு இரு வாரங்களில்பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.