நாங்கள் இடிப்பவர்கள் அல்ல; நாட்டை கட்டமைத்தவர்கள்: பிரதமருக்கு செல்வப்பெருந்தகை பதில்

By KU BUREAU

சென்னை: தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர் பேரவை தலைவர் தாம்பரம் நாராயணன் உள்ளிட்டோர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அதையடுத்து செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

தற்போது 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிந்துவிட்டதால் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அதிதீவிர வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸை பொருத்தவரை எல்லா மதமும் சம்மதம்தான். எப்படி ராமர் கோயிலை இடிக்கவிடுவோம். இந்திய தேசத்தை கட்டமைத்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். நாங்கள் இடிப்பவர்கள் அல்ல. கட்டுபவர்கள். மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பேச்சு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்.

தோல்வி பயத்தில் பாஜகவினர் கலவர அரசியல் செய்கின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் மக்கள் பெருமளவில் கூடுவதைப் பார்த்து அஞ்சி மோடி மலிவான அரசியல் செய்கிறார்.

பெண்கள் இலவச பேருந்து பயணத்தை மோடி குறைகூறுகிறார். இதிலிருந்து பாஜக பெண்களுக்கு எதிரானது என்பது தெரிகிறது. மெட்ரோ ரயிலிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

தேர்தல் பத்திரம், பிஎம் கேர்ஸ் மூலம் பெற்ற பணம் என்ன ஆனது என்று வெளிப்படையாக சொல்லிவிட்டு அரவிந்த் கேஜ்ரிவால் பற்றி மோடி பேசலாம்.

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக காவல் துறையினர் ரகசியமாக புலன்விசாரணை மேற்கொள்கின்றனர். இந்த வழக்கில் மேல்விசாரணை தேவை என்று கருதுகிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE