பி.எம். கிசான் திட்டத்தில் 22 லட்சம் விவசாயிகள் நீக்கம்: தமிழக அரசு விளக்கமளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

By KU BUREAU

சேலம்: பி.எம். கிசான் திட்டத்தில் தமிழகத்தில், 43 லட்சம் விவசாயிகள் நிதி பெற்று வந்தனர். அவர்களில் தற்போது 22 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை அதிருப்திதெரிவித்துள்ளார்.

சேலத்தில், பாஜக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி, கொண்டலாம்பட்டியில், காமராஜரின் படத்துக்கு, மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செய்தார்.

இதன் பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசு 2020-ல் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில், பள்ளிகளில் காலை உணவு திட்டம்செயல்படுத்த வேண்டும் என்றுகுறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு நிதி வழங்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. புதிய கல்விக் கொள்கை சிறப்பான திட்டங்களைக் கொண்டது. அதை,மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். ஆனால், தமிழக அரசு அதைஏற்காமல், விதண்டாவாதம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு செய்யவேண்டிய திட்டங்களை யார் செய்தாலும் அதை வரவேற்க வேண்டும். காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவும் மாணவர்களுக்கு சத்தாக வழங்க வேண்டும். மத்திய அரசு, மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு வழங்குவது குறித்து ஓர் அளவுகோலையும் குறிப்பிட்டுள்ளது.

நீட் தேர்வு இருக்க வேண்டும்என்பது எங்கள் நிலைப்பாடு. நடுத்தர, ஏழை மாணவர்கள், மருத்துவக் கல்வியில் சேர நீட்தேர்வுதான் உதவியாக இருக்கிறது.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின்னர் இந்த ஆண்டுதான், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் 59 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு என்பது சிறிய அளவில் தான் நடந்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சரணடைந்தவர் ரவுடி திருவேங்கடம். அவரை என்கவுன்ட்டர் செய்துள்ளனர். சரணடைந்த அவர் ஏன் தப்பி ஓட வேண்டும். போலீஸார் வெளியிட்டுள்ள குற்றவாளிகளின் படம், சிசிடிவி காட்சிகள் போன்றவை, அவர்கள் தான் கொலையில் ஈடுபட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆனால் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை, இவர்கள் ஏன் கொலை செய்தார்கள். இவர்களை ஏவியது யார்? அரசியல் காரணமா? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? இதற்காக தான் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பி எம் கிசான் திட்டத்தில், 43 லட்சம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி பெற்று வந்தனர். தற்போது, இவர்களில் 21 லட்சம் விவசாயிகள் மட்டுமேபிஎம் கிசான் நிதியை பெறுகின்றனர். இத்திட்டத்தில், அரசு பணியில் இருப்பவர்கள், வார்டு கவுன்சிலராக இருப்பவர்கள் உள்ளிட்ட சிலரை தவிர்த்து, சிறு குறு விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாயிகள் அனைவரையும் சேர்க்கலாம் என்று மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்தது.

ஆனால் தமிழகத்தில் தற்போது22 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் மத்திய அரசின் மீது அதிருப்தி அடைய வேண்டும் என்பதற்காகவே விவசாயிகளை பி எம் கிசான் திட்டத்தில் இருந்து நீக்கி உள்ளனர்.

இதற்கான காரணத்தை தமிழக அரசு 2 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். இல்லாவிடில், விவசாயிகளிடம் மனுக்கள் பெற்று, மாவட்டஆட்சியர் அலுவலகங்களில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, மாநிலதுணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE