விருத்தாசலம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து: இரு வாலிபர்கள் உயிரிழப்பு

By KU BUREAU

விருத்தாசலம்: பரவலூர் - கோமங்கலம் இடையே பைக் மீது லாரி மோதி இரு வாலிபர்கள் உயிரிழந்தனர். இதில் வேடிக்கை பார்த்தவர்கள் மீது கார் மோதியதில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்குபாலன் மகன் பிரதீப் ராஜ் (21). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் மணிமாறன் (18). இருவரும் இன்று ஒரே பைக்கில் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பரவலூர் - கோமங்கலம் இடையே சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் பிரதீப் ராஜ், மணிமாறன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீஸார் அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது விபத்து நடந்த செய்தி பரவியதால், அதனை பார்ப்பதற்காக அருகில் உள்ள கிராம பொதுமக்கள் குவிந்தனர். அப்போது வேப்பூர் பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் சுமார் 17 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கார் ஓட்டுநரை சரமாரியாக தாக்கினார்கள்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இரு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE