"புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடமிருந்து ஓரிரு நாளில் ஒப்புதல் கிடைக்கும். இம்மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அமைச்சர் திருமுருகனுக்கு முதல்வர் விரைவில் இலாக்கா ஒதுக்குவார்" என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அண்ணா சாலை - காமராஜர் சாலை சந்திப்பில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஓரிரு நாளில் ஒப்புதல் கிடைத்துவிடும். இந்த முறை பட்ஜெட் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எந்தெந்த திட்டங்கள் பாதியில் நிற்கிறதோ அதற்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து முடிப்பதுதான் சரியாக இருக்கும் என்று கருதியுள்ளோம்.
”அந்த வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். எழுச்சிமிகு புதுச்சேரி என்பதுதான் நம்முடைய நோக்கமாக உள்ளது. அதை நோக்கிய பயணம் தொடரும். புதுச்சேரிக்கு கூடுதல் நிதி வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், ஒதுக்கப்படுகின்ற நிதி விரையம் ஆகாமல் மக்களை சென்றடைய வேண்டும்” என்றார்.
» இன்று 122-வது பிறந்தநாள்: காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர்!
» தஞ்சை மாவட்டத்தில் 141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்!
மேலும் பேசிய அவர், “பிரச்சினையை முடிக்க என்கவுன்ட்டர் மட்டுமே தீர்வாகாது என்பது வேறு. அதற்காக என்கவுன்ட்டரே கூடாது என்பதல்ல. என்கவுன்ட்டர் நடக்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று பார்க்கும் போது, ரவுடிகள் உருவாகாமல் இருக்க வேண்டும். ரவுடிகள் உருவாகாமல் இருப்பதற்கு அடிப்படையாக நாம் செய்ய வேண்டியது கட்டப்பஞ்சாயத்து இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பது தான்” என்றார்.