காவிரி நதிநீர் விவகாரத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்களின் கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

காவிரி நதியில் தமிழகத்திற்கான நீரைத் தராமல் கர்நாடகா அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி கூடிய காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு, தமிழகத்திற்கு தினசரி 1 டிஎம்சி நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் இதனை செயல்படுத்த முடியாது என கர்நாடகா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கர்நாடகாவின் இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையே கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநில அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உரிய நதிநீர் பகிர்வை வழங்க வேண்டும் என தமிழ்நாட்டின் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழகத்திறகு நீரை தரமாட்டோம் என கர்நாடகா கூறுவது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது.’

’காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைவரையும் ஆலோசித்து சட்ட வல்லுனர்களின் கருத்துக்களை பெற்று முடிவு எடுக்கப்பட உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE