பெருந்தலைவர் என்றும், கிங் மேக்கர் என்றும் கல்விக் கண் திறந்தவர் என்றும் அழைக்கப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா இன்று கல்வித் திருவிழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, மக்களின் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15-ல் மகனாகப் பிறந்தவர் காமராஜர். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் 6-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போதே பள்ளி செல்வதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது முழு நேரத்தையும் நாட்டுக்காகவே அர்ப்பணித்ததால் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர். எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றில் இடம்பிடித்தவர் காமராஜர்.
பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறவில்லை என்ற போதும் தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார் காமராஜர். தமிழ்நாட்டின் முதல்வராக, பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். பதவியை மக்களுக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே கருதியவர் காமராஜர். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காக பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற லட்சியப் பிடிப்போடு வாழ்ந்தார்.
இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு நாட்டின் விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தார். 1940-ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். 1964-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். நேருவின் மறைவுக்குப் பிறகு இருமுறை இந்தியப் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய வங்கு வகித்தவர் காமராஜர். அதனால்தான், அவர் கிங் மேக்கர் என அழைக்கப்படுகிறார்.
» திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே விக்கிரவாண்டி வெற்றி: கடிதத்தில் ஸ்டாலின் பெருமிதம்
1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளராகவும், 1937-ல் எம்எல்ஏ-வாகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும், 1941-ல் விருதுநகர் நகராட்சித் தலைவராகவும் 1946-ல் எம்எல்ஏ-வாகவும், 1949-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும், 1952-ல் எம்பி-யாகவும், 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகவும் பதவி வகித்தார் காமராஜர்.
பின்னர் 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், 1969 மற்றும் 1971-ல் எம்பி-யாகவும் பதவி வகித்தவர் காமராஜர். அவருக்கு 1972-ல் தாமிரப் பத்திர விருதும், 1976-ல் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டன. 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காமராஜர் காலமானார். பல்வேறு பெருமைக்குறிய காமராஜரின் விருதுநகர் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நினைவு இல்லத்தில், காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறும் புகைப்படங்கள், அவர் படித்த நூல்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காமராஜர் பிறந்த தினம் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழாவான இன்று அவர் பிறந்த ஊரான விருதுநகரில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் நாடார் சங்க நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆகியோரும் காமராஜர் இல்லத்தில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, விருதுநகர் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ - மாணவியர், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் காமராஜர் இல்லத்தை பார்வையிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
விருதுநகர் மதுரை சாலையில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் காமராஜரின் உருவ சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சிவகாசி மேயர் சங்கீதா, எம்எல்ஏ-வான சீனிவாசன், நகராட்சி தலைவர் மாதவன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.