திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே விக்கிரவாண்டி வெற்றி: கடிதத்தில் ஸ்டாலின் பெருமிதம்

By KU BUREAU

சென்னை: தமிழக மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்துள்ளதை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி காட்டுவதாகவும், 3 ஆண்டு நல்லாட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ் தான் இந்த வெற்றி என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடல்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மகத்தான வெற்றி பெற்றுள்ளார். மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

தமிழக மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்துள்ளதை இந்த வெற்றி காட்டுகிறது. 3 ஆண்டு நல்லாட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ் தான் இந்த வெற்றி. இதை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக ஒதுங்கி நின்று, தனது கள்ளக் கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.

திட்டங்களின் பயன்கள் எல்லோருக்கும் கிடைப்பதை உறுதி செய்து, பாகுபாடின்றி அதனைச் செயல்படுத்தி வருகிறோம். ஒருவர் எந்தக் கட்சிக்காரர் என்று பார்ப்பதில்லை. தமிழக வாக்காளரான அவர், திட்டத்தில் பயன் பெறத் தகுதியுடையவரா என்பதை மட்டும் பார்த்து, அதன் பயனைக் கிடைக்கச் செய்கின்ற அரசுதான் திமுக அரசு.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சமூகநீதிக் கொள்கையால் தலைமுறைகள் கடந்து அடைந்துள்ள முன்னேற்றத்தை அவர்கள் மறக்கவில்லை என்பதைத்தான் விக்கிரவாண்டி மக்கள் தந்துள்ள வெற்றி எடுத்துக் காட்டுகிறது.

கடந்த 3 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் அவர்களை அழைத்துச் செல்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன், வாக்கு சேகரித்து வெற்றிக்குத் துணை நின்றார்.

திமுகவின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக, ஐயுஎம்எல், விசிக, மமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திமுக வேட்பாளருக்காக பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரேயொரு தொகுதியில் திமுக அரசுக்கு எதிராக திட்டமிடப்பட்ட சதிகள், சாதி,மத வன்முறையைத் தூண்டும் வேலைகள், கருணாநிதி மற்றும் திமுக மீது வைக்கப்பட்ட மலிவான, மட்டமான அவதூறுகள், திமுகவுக்கு எதிராக களத்தில் நின்றவர்கள், நிற்பதற்கு பயந்தவர்களும் உருவாக்கிய ரகசிய ஒப்பந்தங்கள் என அனைத்தையும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் முறியடித்து, திமுக வேட்பாளருக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ளனர்.

மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை அறிவித்து அவற்றை முழுமையாகச் செயல்படுத்துவதும், யாரும் எதி ர்பாராத எந்த ஒரு அசம்பாவித நிகழ்வு நடந்தாலும் அதற்குப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு அதனை சரிசெய்யும் நேர்மைத் திறமும் நிர்வாகத் திறனும் கொண்டதுதான் திராவிட மாடல் அரசு. இன்னும் பல திட்டங்கள் தொடரும். அதில் விக்கிரவாண்டி தொகுதியும் பயன்பெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE