சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு கிடந்த சமூகத்தை உயர்த்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட வன்னியர் சங்கம், வரும் 20-ம் தேதி 45-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வன்னியர் இட ஒதுக்கீடு என்ற நமது இலக்கை வென்றெடுப்பதற்கான எஞ்சிய பயணமும் இனிமையானதாக இருக்காது.
சமூகநீதிக்கு சமாதி கட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருப்பவர்களிடம் நாம் போராடி தான் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டியுள்ளது. இதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நாம் தயாராக வேண்டும். 1987-ம் ஆண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தில் 21 பேர் துப்பாக்கி குண்டுகளாலும், காவல்துறை தாக்குதலிலும் கொல்லப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் நம்மை அழைத்துப் பேசி இட ஒதுக்கீடு வழங்க முன்வந்தாலும் கூட, அடுத்த சில நாட்களில் அவர் காலமானதால் நமது தனி இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. 1989 தேர்தலில் ஆட்சியமைத்த கருணாநிதி, என்னை அழைத்துப் பேசினார். வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் வலியுறுத்திய நிலையில், அவரோ வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
அதிமுக ஆட்சியில் இரண்டாவது சமூகநீதிப் போராட்டத்தை நடத்தி, வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள் இடஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். ஆனால், சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்கு காரணமாக வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க திமுக அரசுக்கு மனம் வரவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதன் நோக்கம் வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்கக்கூடாது என்பதைத் தவிர வேறு என்ன?
மிகப்பெரிய சமூகநீதிப் போரை நாம் நடத்தியாக வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக வேண்டும். வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை நாம் மீண்டும் வென்றெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.