தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று முதல் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், காலையில் உணவளிக்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அந்த திட்டத்தை விரிவுபடுத்தி, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் காலை உணவளிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்படது. அதன்படி, முதல்வர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் இன்று நடைபெறுகிறது.
இதன் மூலம் புதியதாக, அரசு உதவி பெறும் 3,995 தொடக்க பள்ளிகளில், முதல்வர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மேலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தின் விரிவாக்க நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகள் அனைத்திலும், முதல்வர் காலை உணவு திட்டம் அமலுக்கு வரவுள்ளது.
முதல்வர் காலை உணவு திட்டம் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் அமல்படுத்தியதன் மூலம், 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி, திருக்குவளையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் நடமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக, 18.50 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர். காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் பள்ளிக்கு வருகை தருவது உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்த திட்டத்தை தெலங்கானாவிலும், கனடாவில் தேசிய உணவு திட்டம் என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.