சென்னை: சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் மூலம்தான் குற்றவாளிகள் உறுதிபடுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்தான் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை போலீஸார் திரட்டினர். முதல்கட்டமாக கொலை சம்பவம் நடைபெற்ற இடம், அதை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் கைப்பற்றினர்.
அதை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டவர்கள் கொலையாளிகள்தான் என போலீஸார் உறுதிபடுத்தியுள்ளனர். அதன்படி, கொலையாளிகள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் நேற்றுசமூக வலைதளங்களில் வெளியானது. சுமார் 3.32 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் வெளியான விபரம்:
» மதுரையில் மாணவன் கடத்தல் சம்பவம்: மூளையாக செயல்பட்ட கடத்தல்காரர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்
» கோவை ஆவாரம்பாளையத்தில் முகமூடிக் கொள்ளையன்: பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டி வரும், தனது வீட்டின்கட்டுமான பணிகளை பார்வையிடுகிறார். கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் தெரு இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவில் குறுகிய வழியாக உள்ளது. அந்த தெருவில் முதலில் ஒரு இருசக்கர வாகனத்தில் தனி ஆளாக ஒருவர் அவரை நோட்டமிடுகிறார்.
பின்னர் இன்னொரு இருசக்கர வாகனத்தில் மற்றொருவர் வருகிறார். சிறிது நேரத்தில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் 2 பேர் வருகின்றனர். அனைவரும் வந்ததும் ஆம்ஸ்ட்ராங்கை தாக்க தொடங்குகின்றனர். அருகில் இருந்தவர்கள் பின்னோக்கி நகர்கின்றனர்.
ஒருவர் ஆம்ஸ்ட்ராங்கை நோக்கிகாப்பாற்ற வரும்போது தனியார் உணவு விநியோக நிறுவன சீருடைஅணிந்த ஒருவர் அவரை அரிவாளால் துரத்த தொடங்குகிறார். உடனே அவரும் பின்னோக்கி ஓடுகிறார்.
வேறு யாரும் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் இருக்கஇன்னும் 3 பேர் சுற்றி இருந்ததொழிலாளர்களை விரட்டி அடித்தனர். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யார் இந்த திருவேங்கடம்? சம்பவத்தன்று திருவேங்கடம் தான் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேச்சு கொடுக்கப் போவதுபோல் சென்று பின்னந்தலையில் அரிவாளால் தாக்குகிறார். அதன் பிறகுதான் மற்றவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டுகின்றனர்.
ஆற்காடு சுரேஷின் கும்பலில் இருந்த திருவேங்கடம் அவரின் தம்பியான பொன்னை பாலுவுடனும் நெருக்கமாக இருந்துள்ளார். ஆற்காடு சுரேஷின் நட்பு கிடைத்த பின்னர் தான் செய்து வந்த கூலி வேலையை விட்டு விட்டு ரவுடியாக வலம் வந்துள்ளார்.
இந்நிலையில்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பொன்னை பாலுவுடன் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக 10 நாட்களாக ஆன்லைன் உணவு விநியோக ஊழியர் போல சீருடை அணிந்து ஆம்ஸ்ட்ராங் செல்லும் இடமெல்லாம் சென்று நோட்டமிட்டுள்ளார். மற்ற கொலையாளிகளுக்கும் இதேபோல் உடை அணிய யோசனை வழங்கி உள்ளார்.
மேலும், அவரே ஆம்ஸ்ட்ராங்கை முதன்முதலில் தாக்கி உள்ளார். கொலைக்கு முன்னர் கள்ளத் துப்பாக்கியையும் வாங்கி பதுங்கி வைத்திருந்தார். அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்ய சென்றபோதுதான் என்கவுன்ட்டர் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ரவுடி கும்பல் ஒன்று குடித்துவிட்டு பொது மக்களிடம் தகராறு செய்தது. தட்டிக்கேட்ட காவலர் ராஜவேலுவை அந்த ரவுடிகள் அடித்து உதைத்து அரிவாளால் வெட்டினர்.
இவர்கள் ரவுடி ஆனந்தன் தலைமையிலான கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்ய முயன்றபோது போலீஸாரின் துப்பாக்கி சூட்டில் ஆனந்தன் உயிரிழந்தார். தற்போது 6 ஆண்டுக்கு பிறகு சென்னையில் மீண்டும் ஒரு என்கவுன்ட்டர் நடைபெற்றுள்ளது.
திமுகவினருக்கு தொடர்பா? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, திருமலை, மணிவண்ணன், திருவேங்கடம், ராமு என்ற வினோத், சந்தோஷ், அருள், செல்வராஜ், கோகுல், சிவசக்தி, விஜய் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இக்கொலை வழக்கில் திமுகவினர் 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சி நடப்பது போல தெரிவதாகவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி எழுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக போலீஸார் பதிலளித்தனர்